இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார்.
இன்று (22) காலை கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதி தமது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்தவினால் வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யாவுக்கு சம்பிரதாயபூர்வமாக கடற்படைத் துறையின் வாள் கையளிக்கப்பட்டதுடன், பொறுப்புகளும் கைமாற்றப்பட்டன.
இதேவேளை, புதிய கடற்படைத் தளபதிக்கு பதவியேற்பை கௌரவிக்கும் முகமாக மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
கண்டி திருத்துவ கல்லூரியிலும், திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியிலும் பழைய மாணவராகிய ட்ரெவிஸ் சின்னய்யா 1982 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டார்.
அத்துடன் அவர் கிழக்கு மாகாண கடற்படை நிறைவேற்று கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார்.
இந்தநிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன இன்று பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.