மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, காணாமல் போனோரைக் கண்டறிதல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார்.
எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், மாலை 4.30 வரை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீதரன் எம்.பி மேலும் கூறினார்.
யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.