2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு

2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை…

நம் நாட்டின் தலைவிதியையும் எம் நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தலை நம்நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வட – கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் பேசவும் செயற்படவும் வேண்டிய முக்கிய கடமை எனக்குண்டு. ஏனெனில் பாராளுமன்றத்திலும் அல்லது வேறு இடங்களிலும் அவர்களுக்கான முறையான பிரதிநிதித்துவம் இல்லை. தொடர்ந்து நடைபெற்ற 3 ஜனாதிபதித் தேர்தல்களில் 2005ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இனப்பிரச்சனை சம்பந்தமான விடயத்தை ஏனையவற்றுடன் தொடர்புபடுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து பிரித்தெடுத்து தேர்தல் முடிந்தபின் அதைப்பற்றி ஆலோசிக்கலாம் என பலதடவை கோரியிருந்தேன். வெற்றிபெற்ற வேட்பாளர், ஏனைய வேட்பாளர்களுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுத்து பொது ஜன வாக்கெடுப்புக்கு விடலாம் எனவும் கோரியிருந்தேன்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆந்திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு வாக்காளர்கள் அப்பாவித் தனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் ஜனநாயகம் தடம்புரள காரணமாக இருந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பெயரை மோசடியாகவே பாவிக்கின்றோம் எனத் தெரிந்திருந்தும் தமிழ் மக்களை கூட்டமைப்பு தப்பாக வழிநடத்தியுள்ளது. முக்கூட்டுத் தலைவர்களான திருவாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியை மிக சக்தியுடையதாகவும், பெரிதும் மதிக்கத்தக்கதாகவும் வழிநடத்தினர். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக திரு. இரா. சம்பந்தன் திருவாளர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையின் பின் அவர் வகித்த கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியை தனக்கே தரவேண்டுமென அடம்பிடித்து பெற்றுக்கொண்டார். மிகவும் கண்ணியமான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் அவரே!

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடுமென தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார். ஆச்சரியத்தக்க வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த திரு. சம்பந்தன் அவர்கள் விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட சிலவேட்பாளர்களின் பெயரை உள்ளடக்கி தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்தபோது அப்பத்திரம் நாட்டிற்கே பெரும் அதிர்ச்சிதரும்வகையில் நியமனப் பத்திரம் விடுதலைப் புலிகளின் சார்பாக கையளிக்கப்படுவதாக பகிரங்கமாக கூறியிருந்தார். வேதனை தரத்தக்க இச்செயல் – மிகச் செல்வாக்குப்பெற்ற ஒரு சிரேஷ்ட அரசியல் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத் தேரதலில் கட்சி ரீதியாக போட்டியிடும் உரிமையை இழந்தது. இக்கட்டத்தில் ஒன்று, தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க வேண்டும் அல்லது சுயேட்சையாக போட்டியிடவேண்டிய நிலைக்கு ஆளாகியது. அத்தேர்தலில் பெருமளவில் சண்டித்தனம், மிரட்டல், ஆள்மாறாட்டம் போன்ற அருவருக்கத்தக்க செயல்களால் திரு. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் 2 ஆசனங்களுட்பட 22 ஆசனங்களை பெற்றது.

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்க மாறாக மோசடி மூலம் தெரிவாகியபடியால் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகளும் சர்வதேச சமூகமும் இவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது பாராமுகமாக இருந்தனர். அதன் விளைவால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் யுத்தகளத்தில் உயிரிழக்க நேர்ந்தது. உண்மையான மக்களின் குறைபாடுகளைக்கூட அரசு கண்டும் காணாமல் இருந்தது.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத்தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி தந்த முடிவும் கூடுதலான கூட்டமைப்பின் பொய்யான பிரச்சாரங்களினாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்பிருந்த செல்வாக்கைத் திரும்பப்பெற முடியாதுபோனது.

2005ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் ஒருவராகிய கௌரவ. ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சனை சம்பந்தமாக முன்வைத்த சமஷ்டி ஆட்சி முறையை கணக்கில் எடுக்காது மக்களை தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரியிருந்தனர். அப்பிரேரணைக்கு அன்று சிங்கள மக்கள் 49வீதம் ஆதரவு வாக்களித்தும் தமிழ் மக்கள் அத்தேர்தலைப் பகிஷ்கரித்தமை முட்டாள்தனமானது மட்டுமல்ல கூட்டமைப்பு இச்செயலின்மூலம் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்தது.

இத்தகைய பல கண்டனங்கள் என்னால் முன்வைக்க முடியுமாக இருந்தும் மிகச் சொற்பமானவற்றையே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் மக்களுக்கு நான் வழங்கக்கூடிய ஆலோசனை யாதெனில், எதிர்காலத்திலேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை உதாசீனம் செய்து, பெரும் தமிழ்த் தலைவர்களாகிய திருவாளர்கள். சா.ஜே.வே. செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான், அ.அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற மற்றும் பலரின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இயங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை மீண்டும் மதித்து எம்முடன் இணையுமாறு வேண்டுகிறேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பெருமையோடு கூறுவது யாதெனில், இந்தப் பெருந்தலைவர்களின் வழிகாட்டல்களை தற்போதும் பின்பற்றுவதை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக் கொள்வீர்கள். அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணி கடைப்பிடித்துவந்த உயர் கொள்கைகள் எதிர்காலத்திலும் கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து – ஒவ்வொரு தமிழரையும் இழந்த உரிமைகளை – மீளப் பெறுவதற்காக அணிதிரளுமாறு வேண்டுகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னலம் கருதி எவ்வாறு தீர்மானங்களை எடுப்பவர்கள் என நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் சரித்திரத்தை அறிந்தவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிந்தவர்களும் தத்தமது பெறுமதிமிக்க வாக்கை யாருக்கு அளிக்க வேண்டும் என நாம் கூறித் தெரியவேண்டியதில்லை.

நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானம் உங்களுடையதே!

வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம் – த.வி.கூ

Related Posts