2016இல் சர்வஜன வாக்கெடுப்பு?

vote-box1[1] (1)ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

பிரபல அமைச்சர்களே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இன்னும் ஆறு வருடங்களுக்கு தக்கவைத்து கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏழாவது நாடாளுமன்றத்திற்கான பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதற்காக 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்டது. அதில் ஜனாதிபதியாக தெரிவான மஹிந்த ராஜபக்ஷ, நவம்பர் மாதம் 18ஆம் திகதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவருடைய ஆறுவருடகால பதவிகாலம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தாலும் மக்களின் செல்வாக்கையும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் தக்கவைத்துகொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலை அடுத்தவருட நடுப்பகுதியில் நடத்துவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக ஏற்ககெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சற்று பின்னடவை சந்தித்தமையினால் எடுத்த எடுப்பிலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான சாத்தியகூறுகள் குறைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தாமல் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரச பேரவையின் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களுக்கு நீடித்துகொள்வதற்காக, சர்வஜன வாக்கெடுப்பை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1982 டிசெம்பர் 22ஆம் திகதி முதன் முறையாக நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 5,762,662 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 3,141,223 பேர் இந்த அரசாங்கத்தை இன்னும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கும் 2,605,983 பேர் நீடிக்கவேண்டாம் என்றும் வாக்களித்தனர். அதில் 21,456 பேர் செல்லுபடியற்ற வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts