கடந்த 2015ம் ஆண்டு எனது அமைச்சுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) மூலமாக 310.82 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றன. அதனடிப்படையில் கடந்த வருடம் ஏறத்தாழ 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு; 31.12.2015 வரை அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி 310.61 மில்லியன் ரூபா ஆகும் இது ஏறத்தாழ 99.93 வீதத்தை எட்டியுள்ளது. என வடமாகாணசபை போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை கிராமிய அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடின உழைப்பிருந்தால் மட்டுமே போட்ட திட்டங்களை உரிய காலத்தில் தரமான முறையில் நிறைவேற்ற முடியும் என்றும் தனது அமைச்சைப் பொறுத்த மட்டில் எந்த திட்டங்களை முன்மொழிந்திருந்தாரோ அத்திட்டங்களையே தான் நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்ததார். மேலும் மாகாணத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் ஒரு ரூபாயேனும் வீணாகமல் உச்ச பயன்பாட்டை அடைய வேண்டுமெனில் அந்தந்த துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர்கள் தங்களுக்கு கீழ் இருக்கின்ற திணைக்களங்களையும், பிரிவுகளையும் நேரடியாக கண்காணிப்பதிலும், திட்டங்கள் நடைபெறுகின்ற இடங்களை நேரடியாக சென்று பார்வையிடுதலும், மதிப்பீடு செய்தலும் (Close Monitoring and Evaluation) அவசியம் என்கிறார் அமைச்சர்.
அத்தோடு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் இன்னும் மேலதிகமான நிதி கோரியிருந்ததாகவும் ஆனால், அவை கிடைக்கப்பெறவில்லையெனவும் கிடைக்கப்பெற்றிருப்பின் வீதி அபிவிருத்திக்கும், கிராமங்கள் தோறும் ஓரு நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மற்றும் மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கலாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வேளையில் தனது கொள்ளைப் பிரகடனத்திற்கும் திட்டங்களுக்கும் உயிரூட்டம் அளித்த அமைச்சின் செயலாளர், பணிப்பாளர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தனது பிரத்தியேக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.