2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்

2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார்.

விவசாய கடன்

அதன்படி விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவு வீட்டுக்கடனுக்கு 1000 மில்லியன்

பாதுகாப்பு பிரிவுகளில் பணிபுரியும் நபர்களின் குடும்பங்களுக்கு 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கென 2013 வரவு – செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலிஸ் துறைக்கு 950 மில்லியன்

பொலிஸ் துறையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்த 950 மில்லியன் ரூபாவினை ஒதுக்கவும் பொலிஸ் கொடுப்பனவு தொடர்பில் சம்பள சபை முன்வைத்த கோரிக்கையை அமுல்படுத்தவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

குடிநீர் வசதிக்கு 126 பில்லியன்

5இலட்சத்து 80ஆயிரம் பேருக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுக்க நாடு முழுவதும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கென 2013ம் ஆண்டில் 126 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இறக்குமதி பால்மா வகைகளின் வரி அதிகரிப்பு

உள்நாட்டு பால் மற்றும் பால்மா உற்பத்தியை அதிகரிக்கவென இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளுக்கான வரி மேலும் அதிகரிக்கப்படும்.

உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் பால் ஒரு லீட்டர் குறைந்தது 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

ஓட்டப்பந்தய வாகனங்களுக்கான இறக்குமதி வரி இரத்து

ஓட்டப் பந்தயத்திற்கென இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களினதும் இறக்குமதி வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கஸ்டப்பிரதேச மாணவர்களுக்கு மேலதிக சீருடை, பாதணிகள் வழங்கப்படும்

கஸ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவு – செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்க வருட மத்தியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்க முற்றாக தடை

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குத்தகை அடிப்படையில் வழங்கினால் 100க்கு நூறு வீத விலை அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைக்கு 125 பில்லியன்

நாட்டில் முறையான சுகாதார சேவையை வழங்குவதற்கு 2013 நிதியாட்டில் 125 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

கல்வித்துறைக்கான செலவு நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு

இலவசக் கல்வித்துறை அபிவிருத்திக்கென 2013ஆம் வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதாக ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

அதன்படி கல்வித்துறைக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் அது 4.1 வீத ஒதுக்கீடாகும்.

ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு 200 மில்லியன்

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாகனம் கொள்வனவு செய்ய வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. இம்முறை அத்திட்டத்திற்கு மேலும் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

வாகன இறக்குமதி வரி 10முதல் 20 வீதம் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 10 முதல் 20 வீதம் வரை அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

மதுபான இறக்குமதி தீர்வை வரி 25 வீதத்தினால் அதிகரிப்பு

வெளிநாட்டு மதுபான இறக்குமதி தீர்வை வரி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 1500 ரூபா அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை 1500 ரூபாவால் அதிகரிக்க ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.

அத்துடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள நிலை குறித்து ஆராய்வதற்கு புதிய சம்பள ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

65 வயதுக்கும் மேற்பட்ட வேலையற்றோருக்கு மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும்

65 வயதிற்கும் மேற்பட்ட நிலையில் தொழில் இன்றி இருப்போருக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

Related Posts