20 வருடப் பிரச்சினையை குறுகிய நாட்களில் முடிக்க முடியாது – சுவாமிநாதன்

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

D-m-suwamynathan

மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை (26) விஜயம் செய்தார்.

முற்பகல் 11.30 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் மக்களைச் சந்தித்து மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு விடயங்களைக் கேட்டறிந்தார். பிற்பகல் 2.00 மணிக்கு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் மக்களைச் சந்தித்த அமைச்சர் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு விடயங்களைக் கேட்டறிந்தார்.

இதன்போது அமைச்சர் கருத்து கூறியதாவது,

யாழ்ப்பாணம் சென்று கொண்டிருக்கின்றேன். செல்லும்வழியில் வவுனியாவிலும் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று புனரமைப்பு விடயங்களை ஆராய்வது செய்வதற்காக வந்தேன்.

‘வலிகாமம் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காணி ஆயிரம் ஏக்கர் கிடைத்திருக்கின்றது. அக்காணிகளில் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்வது என்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடனும் இராணுவத்துடனும் கலந்துரையாடப்படும்’ என்றார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் பல்லாயிரக்கணக்கான காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்படாதுள்ளது. தாங்கள் இன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்த நிலையில் அது தொடர்பாக ஏதாவது முடிவெடுத்துள்ளீர்களா? என ஒரு ஊடகவியலாளர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த அமைச்சர், ’20 வருடப் பிரச்சினையை 30 நாட்களில் தீர்க்கமுடியாது. எனது கடமையை நான் செய்து முடிப்பேன்’ என்றார்.

அத்துடன், ‘சகல இடங்களிலுள்ள பிரச்சனைகளையும் நான் தீர்ப்பேன். கட்டங்கட்டமாகத்தான் பிரச்சனைகளை தீர்ப்பேன். முதற்கட்டமாக 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூரிலும் காணி விடுவிக்கும் பிரச்சினையுள்ளது.

அரசுடன் கலந்துரையாடி அந்த பிரச்சனையையும் தீர்ப்பதற்கு முன்வந்துள்ளோம். அவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்ப்போம்’ என்றார்.

Related Posts