நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.
அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கும் நிதி வழங்கினார்கள். 20 மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் கல்வி உதவி வழங்கப்பட்டது. திண்டிவனம் அருகே உள்ள தாய்தமிழ் இலவச தொடக்கப் பள்ளிக்கு ரூ.2.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:-
உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படை தேவைகளோடு கல்வியும் சேர்ந்து விட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். மாணவ-மாணவிகள் பலர் வறுமை உள்ளிட்ட பல்வேறு சவால்களை மீறி படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று சாதிக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி வருகிறோம்.
1300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். 40 மாணவர்களுக்கு தொழில் கல்வி பயிற்சியும் அளிக்கிறோம். ஒவ்வொருவரும் ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும். கல்விதான் வாழ்க்கையை அழகாக்கும். எனவே மாணவர்கள் வைராக்கியத்தோடு கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘பிளஸ்-2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 36 வருடங்களாக கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரூ.5 லட்சம் வரை உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. பலர் கஷ்டங்களை தாண்டி படித்து சாதித்து இருக்கிறார்கள். தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அறக்கட்டளை மூலம் உதவி வருகிறோம். மாணவர்கள் தங்கள் படிப்பை சமூகத்துக்கு பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் சாதித்து இருக்கிறார்கள். அவர்களைப்போல் ஒவ்வொரு மாணவரும் உயர வேண்டும். புகை, மது போன்றவற்றை தவிர்த்து உடம்பை பாதுகாத்துக்கொள்ளுங்கள். அறிவை மேம்படுத்துங்கள். கல்வியும் ஒழுக்கமும் எந்த மூலைக்கு போனாலும் உங்களை காப்பாற்றும்’’ என்றார்.