Ad Widget

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி மார்ட்டின் கப்திலும், கேப்டன் கனே வில்லியம்சனும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டேவிட் வில்லியின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கிய கப்தில், வில்லியின் அடுத்த ஓவரில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். கப்தில் 15 ரன்களில் (12 பந்து, 3 பவுண்டரி) வெளியேறினார்.

இதையடுத்து வில்லியம்சனும், காலின் முன்ரோவும் இணைந்து ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். பிளங்கெட்டின் ஓவரில் முன்ரோ ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டியடிக்க, 5.4 ஓவர்களில் நியூசிலாந்து 50 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திய இந்த ஜோடி 91 ரன்களை (10.3 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. வில்லியம்சன் 32 ரன்களிலும் (28 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), முன்ரோ 46 ரன்களிலும் (32 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இந்த கூட்டணி உடைந்ததும், நியூசிலாந்தின் உத்வேகமும் சீர்குலைந்தது. ஒரு கட்டத்தில் 180 ரன்களை நெருங்குவது போல் சென்ற நியூசிலாந்தின் ஸ்கோர் அடுத்தடுத்து விக்கெட் சரிவால் தளர்ந்து போனது. நட்சத்திர வீரர்கள் ராஸ் டெய்லர் 6 ரன்னிலும், லுக் ரோஞ்ச் 3 ரன்னிலும், கோரி ஆண்டர்சன் 28 ரன்களிலும் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டனர்.

கடைசி கட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களின் பிடி இறுகியதால் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களுக்கு கட்டு படுத்தப்பட்டது. கடைசி 4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 20 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 154 ரன்கள் இலக்கை துரத்தும் முனைப்புடன் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராயும், அலெக்ஸ் ஹாலசும் களம் புகுந்தனர். கோரி ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஜாசன் ராய் 4 பவுண்டரிகளை நொறுக்கினார். 4 ஓவருக்குள் நியூசிலாந்து 49 ரன்களை தொட்டதுடன், நெருக்கடியையும் தணித்து விட்டது. இதன் பிறகு இங்கிலாந்து கேப்டன் வில்லியம்சன், சுழற்பந்து வீச்சாளர்களை அறிமுகப்படுத்திய போதிலும் ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் பலன் இல்லாமல் போய் விட்டது.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் (8.2 ஓவர்) திரட்டி வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். ஹாலஸ் 20 ரன்களில் (19 பந்து) கேட்ச் ஆனார். 26 பந்துகளில் முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்த ஜாசன் ராய் தனது பங்குக்கு 78 ரன்கள் (44 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) சேகரித்தார். அடுத்து வந்த கேப்டன் மோர்கன் டக்-அவுட் ஆனாலும், ஜோ ரூட்- ஜோஸ் பட்லர் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. பட்லர் சிக்சர் அடித்து இலக்கை எட்ட வைத்தார்.

இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜோ ரூட் 27 ரன்களுடனும் (22 பந்து, 3 பவுண்டரி), பட்லர் 32 ரன்களுடனும் (17 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி ஏற்கனவே 2010-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

அதே சமயம் லீக்கில் தோல்வியே சந்திக்காமல் அரைஇறுதியை அடைந்த நியூசிலாந்தின் வீறுநடை முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து, ஒரு முறை கூட இறுதி சுற்றை எட்டியது கிடையாது. அந்த சோகம் தொடருகிறது.

2-வது அரைஇறுதியில் வெற்றி பெறும் அணியுடன் (இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ்) இங்கிலாந்து வருகிற 3-ந்தேதி இறுதிப்போட்டியில் சந்திக்கும்.

Related Posts