இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இடைக்கால அறிக்கை இம்மாதம் 21ம் திகதி வெளியாகும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் 20வது திருத்தச்சட்ட த்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் கூறியிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
20வது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டமையினால் மக்களுக்கும், மாகாணசபைகளுக்கும் போதிய தெளிவு இல்லாமல்போனது. அந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் சில ஐயங்களை எழுப்பியிருந்தது.
அதாவது மாகாணசபைகள் 5 வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பது என்பதை நாங்கள் எதிர்தோம். அதேபோல் மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றம் எடுக்கும் என கூறப்பட்டதையும் நாங்கள் எதிர்தோம். அதே சமயம் 20வது திருத்தச்சட்டம் உயர்நீதிமன்றில் வழக்கில் உ ள்ள நிலையில் சட்டமா அதிபர் முதல் நாளே அரசாங்கம் செய்யவுள்ள சில திருத்தங்கள் தொடர்பாக கூறியிருக்கின்றார்.அதில் நாங்கள் கூறிய திருத்தங்களும் உள்ளடங்கியிருக்கின்றது. அதாவது ஒரே நாளில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நாடாளுமன்றம் தீர்மானிக்காது அதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.
மேலும் 5 வருடங்களுக்கு முன் மாகாணசபை கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தில் மாகாணசபைகளின் அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுக்காது அந்தகாலத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்தப்படும். மேலும் 5 வருடங்களுக்குள் கலைக்கப்பட்டு மிகுதி காலம் 18 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் இடைக்கால தேர்தல்
நடத்தப்படாது. அதற்கு காரணம் தேர்தலுக்கான செலவு மற்றும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான காலம் போதாமை போன்றவற்றால் அதனை நடத்த முடியாது. இந்த அடிப்படைகளால் 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக குறிப்பிட்ட அவர்,
கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இம் மாதம் 21ம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும். இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ம் திகதி உருவாக்கப்பட்ட அறிக்கையாகும். இந்த இடைக்கால அறிக்கையில் அரசியல் கட்சிகளின் எழுத்து மூல கருத்துக்களும் உள்ளடக்கப்படும். மேலும் வழி நடத்தல் குழு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களையும் கூறியிருக்கின்றார்.
அதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தங்கள் கருத்துக்களை கூறியிருக்கின்றது. அதுவும் இடைக்கால அறிக்கையின் ஒரு அங்கமாக வரும். எமது கருத்துக்களில் நாட்டின் சுபாவம் சமஷ்டி அமைப்பாக இருக்கவேண்டும், மதசார்பற்ற நாடாக இருக்கவேண்டும். வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகாக இருக்கவேண்டும். அதேபோல் மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக கேட்டுள்ளோம். அதேபோல் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படட்டும் ஆனால் மற்றய மதங்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என கூறியிருக்கின்றோம். அதே சமயம் இடைக்கால அறிக்கையில் பிரதானமான பகுதியாக ஒரு பகுதி வருகின்றது. அதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒப்புதல் வழங்கினால் அடுத்த கட்டம் தொடர்பாக பேசுவதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கின்றோம்.
எனவே 21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளியான பின்னர் நாட்டிலும், அரசியலமைப்பு பேரவையிலும் விவாதங்கள் நடக்கும். அந்த விவாதங்களின் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் முழுமையான அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார்.