20 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படலாமென வெளியான செய்தி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய உளவுச் சேவை விஷேட அவதானம் செலுத்தி இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்படி தாக்குதல் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சலானது, பங்களாதேஷின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இணையத் தளத்தை ‘ ஹெக் ‘ செய்து, அதனூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறிய்ப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நேற்றுமுன்தினம் செவ்வாயன்று இரவு விமான நிலையத்துக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சலில், எதிர்வரும் 20 ஆம் திக்தி விமான நிலையங்கள் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல் நடாத்தப் போவதாகவும், தாம் பெயரிடும் நால்வரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

எவ்வாறயினும் உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப் பெற்றிருப்பினும், முன் கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில், விமானப்படையினர் மற்றும் விஷேட அதிரடிப் படையினர், பொலிஸ் குழுக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

இந்த மின்னஞ்சலானது, ‘ ஹெக்கர்ஸ்’ என அறியப்படும் இணையங்களை முடக்கும் திட்டமிட்ட கும்பலொன்றின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், உளவுத் துறை சிறப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Related Posts