2.0 விழா, மேடையில் தோன்றி அசத்திய ‘சிட்டி ரோபோ’

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. மூன்று பக்கங்களில் மிக நீளமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் 3 டி தொழில்நுட்பத்தில் ‘2.0’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள்.

chitty

அதை வெளியிடுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து பேட்டியையும் எடுத்தார் விழா தொகுப்பாளராக பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர்.

ரஜினிகாந்தை அழைக்கும் போது ஒரு விஷுவல் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார்கள். ரஜினிகாந்தை மேடைக்கு கரண் அழைத்த போது அவர் வரவில்லை. ஆனால், திடீரென மேடை எதிரில் பிரபலங்கள் அமர்ந்திருந்த வரிசையில் ‘சிட்டி ரோபோ’வாக அமர்ந்திருந்தார்.

“கண்ணா நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்” என டயலாக்கும் பேசி அசத்தியது அந்த ரோபோ.

அதன் பின் சிட்டி ரோபோவிடம் கரண் கேள்விகளைக் கேட்டார். “உன்னை ‘டிஸ்மான்டில்’ பண்ணி மியூசியத்துல வச்சதா இல்ல சொன்னாங்ளே” என்ற கேள்விக்கு, ரோபோ சிரித்துக் கொண்டே“என்னை யாராலயும் அழிக்க முடியாது” என்று பதிலளித்தது.

“உங்க பாஸோட கேர்ள் பிரண்ட் ஐஸ்வர்யா ராய் கூட காதல் என்ன ஆச்சி,” என்று கேட்டதற்கு, “அது ஒரு சோகமான கதை” என்ற பதில் வந்தது.

“அக்ஷய்குமார் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவும்” என்றதற்கு “டிவிங்கிள் டிவிங்கிள் ஆக்ஷன் ஸ்டார்,’ என பதிலளித்தது ரோபோ.

‘பாலிவுட்டின் கிங் யார் ?” என்ற கேள்விக்கு உடனடியாக ‘தி கிரேட் அமிதாப்பச்சன்’ என்ற பதில் வந்தது.

‘பாலிவுட்டின் குயின் யார் ?’ என்ற கேள்விக்கு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி, பிரியங்கா, தீபிகா, காத்ரினா, கரீனா, அனுஷ்கா, ராக்கி சாவந்த்….” என பதில் நீண்டு கொண்டே போனது.

“டிமானிடைசேஷன் பற்றி என்ன தெரியும்’ என்ற கேள்விக்கு, “அது பற்றி என்னுடைய பாஸ் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன், ” என சிட்டி பதில் சொன்னது.

‘பாஸ் என்றால் யார் வசீகரனா’ என கரண் கேட்க, “நோ, சிவாஜி தி பாஸ்,” என பதில் வந்தது.

“படத்தோட டேக்லைன்ல ‘இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல’ என்ற கேள்விக்கு என்ன அர்த்தம் என கரண் கேட்க, ‘இது சம்பந்தமா ஏதாவது கேள்வி கேட்கணும்னா அவர் கிட்ட கேளுங்க,” என மேடையை நோக்கி சிட்டி ரோபோ கையைக் காட்ட, ரஜினிகாந்த் மேடையின் பின் புறம் இருந்து வந்தார், ஆரவாரம் அதிகமாக எழுந்தது. ஒரே சமயத்தில் ரஜினியும், அவர் தோற்றத்தில் ரோபோவும் இருந்தது அட்டகாசமான நிகழ்வாக அமைந்தது.

வீடியோ புரொஜக்ஷன் முறையில் திரையில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வு விழாவுக்கு வந்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 2.0 முதல் பார்வை வெளியீட்டு விழாவில் இந்த அம்சமே மிக மிக வித்தியாசமாக அமைந்தது.

Related Posts