2.0 ரஜினிகாந்த் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதா ? கோலிவுட்டில் பரபரபப்பு

2.0 படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று மும்பையில் நடைபெற்றது. ஹிந்தித் திரைப்பட உலகில் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும் என்ற எண்ணத்தில் மும்பையில் இந்த விழாவை நடத்தியுள்ளார்கள். அதற்குப் பின்னணியில் அக்ஷய்குமார் இருந்திருக்கிறார் என்றும் தகவல் பரவியுள்ளது. மும்பையில் விழா நடந்ததும், அழையா விருந்தாளியாக சல்மான் கான் வந்ததும் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1479706004_filmmaker-karan-johar-will-host-first-look-launch-event-superstar-rajinikanth-akshay-kumars-2

அவற்றை விட ரஜினிகாந்த் பேசியதுதான் இப்போது படத்திற்கே மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

2.0 படத்தின் ஹீரோ நானில்லை, அக்ஷய் குமார் தான் ஹீரோ” என ரஜினிகாந்த் பேசியதற்குப் பின்னணியில் பல காரணங்களைச் சொல்கிறார்கள். 2.0 படம் ஆரம்பமாகும் போது வழக்கம் போல உற்சாகத்துடன் கலந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், பின்னர் அக்ஷய் குமாரை படத்திற்கு வில்லன் என சொல்லி அழைத்து வந்திருக்கிறார்கள். அதன் பின் ரஜினிகாந்தின் உடல் நிலை சரியில்லாமல் போனதைக் காரணம் காட்டி, அவருக்கான முக்கியத்துவத்தை படத்தில் குறைத்துவிட்டார்களாம். ரஜினியை விட அக்ஷய்குமாருக்குத்தான் படத்தில் அதிகமான காட்சிகளை வைத்துள்ளார்களாம். இதைப் பற்றியெல்லாம் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த் வழக்கம் போல அமைதி காத்திருக்கிறார்.

ஷங்கர் படம் என்றாலே சொல்லும் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு செலவு ஆகும். அது போலத்தான் இந்தப் படத்திற்கும் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தினால் சுமார் 300 கோடி ரூபாய் வரைதான் வசூலிக்க முடியும். ஆனால், படத்தின் செலவே 350 கோடி ரூபாய், எனவே அக்ஷய்குமாரை முன்னிலைப்படுத்தினால் ஹிந்தி மார்க்கெட்டையும் சேர்த்து 600 கோடி வரை வசூலிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்கள்.

அதனால்தான் 2.0 படத்தை நேரடி ஹிந்திப் படம் போல காட்டுவதற்காக மும்பையில் விழாவை நடத்தியுள்ளார்கள். மேலும் விழா நிகழ்வில் தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் கேட்ட கேள்விக்கு அக்ஷய்குமார், அவர் சார்பாக பதிலளித்தது அவர்களுக்கிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டுவதாகச் சொல்கிறார்கள். வழக்கம் போல ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக விழாவில் பங்கேற்றார்.

அங்கு சென்ற பின் அக்ஷய் குமாருக்கு மேலும் முக்கியத்துவம் உள்ளதைப் பார்த்ததும் கோபமுற்றார் என்கிறார்கள். மேலும் முதல் பார்வை வெளியிடும் போதும் அக்ஷய்குமாரின் போஸ்டரைத்தான் முதலில் வெளியிட்டார்கள். விழா மேடையில் அக்ஷய்குமார்தான் படத்தின் நாயகன் எனப் பேசி தன் உள்ளக் குமுறலைக் கொட்டிவிட்டார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

குசேலன் படம் வந்த போது கூட தான் அதில் கௌரவ வேடத்தில்தான் நடித்துள்ளேன் என தன்னுடைய ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என வெளிப்படையாகச் சொன்னவர் ரஜினிகாந்த் என்பதையும் ஞாபகப்படுத்துகிறார்கள். அதே போல, 2.0 படம் வந்தால் எங்கே தனது ரசிகர்கள் ஏமாந்து விடுவார்களோ என்ற அச்சத்தில்தான் அவர் இப்படிப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் தெரிவிக்கிறார்கள்.

மும்பை விழாவிற்கே வர மாட்டேன் என்று சொன்ன ரஜினி, கடைசி நேரத்தில்தான் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினியின் மனநிலையைப் புரிந்து கொண்டதால்தான் விழா மேடையில் ஷங்கர் உட்பட பலரும் உற்சாகமே இல்லாமல் இருந்தார்கள் என்கிறார்கள்.

யு டியூப் நேரடி ஒளிபரப்பு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது, அக்ஷய் குமாருக்கு முக்கியத்துவம் கொடுத்தது, ரஜினிகாந்த் பேசியது, சல்மான் கான் வந்தது என சர்ச்சைகளுடன் முடிவடைந்துள்ளது 2.0 முதல் பார்வை வெளியீட்டு விழா.

Related Posts