2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் பங்கேற்பு

ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து 2010-ம் ஆண்டு வெளிவந்து வசூல் குவித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் பட உலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. ரூ.300 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்குகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை 2015-ம் ஆண்டு சென்னையில் தொடங்கி இரண்டு வருடங்களாக பல்வேறு இடங்களில் நடத்தி முடித்தார்கள். இடையில் சிறிது இடைவெளி எடுத்து ‘கபாலி’ படத்தையும் ரஜினிகாந்த் முடித்து விட்டார். இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிலமாதங்கள் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது.

ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் மற்ற நடிகர்-நடிகைகளை வைத்து ஷங்கர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வந்தார். அக்‌ஷய்குமாரின் மிரட்டலான வில்லத்தன காட்சிகள் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டன. 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சென்னை நகரையே அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். தினமும் அந்த படப்பிடிப்பு அரங்குக்கு சென்று தன்னுடைய காட்சிகளில் நடித்து விட்டு வந்தார். அதன்பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சிறிது இடைவெளி விட்டு ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், தற்போது ‘2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி உள்ளனர். இதில் ரஜினிகாந்த் மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். பலத்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. எந்திர மனிதர்களின் சாகச காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் இங்கு படமாகி வருவதாக கூறப்படுகிறது. 2.0 படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் மும்பையில் விழா நடத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டது.

வருகிற தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலரை ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Related Posts