2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய புவனேஸ்வர் குமாருக்குப் பதில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரிச்சட்ர்சன், மார்ஷ், ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் குவித்தனர். பிஞ்ச் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் அவுட்டானார்.

சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான மார்ஷும் 71 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

முதல் போட்டியில் சதம் அடித்த தலைவர் ஸ்மித்தும், ஜார்ஜ் பெய்லியும் இணைந்து ரன்களை குவித்தனர். அதிலம் பெய்லி இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.

கேப்டன் ஸ்மித் 46 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும், பெய்லி கடைசி வரை நிலைத்து நின்று அணியை கரை சேர்த்தார். அவர் அவுட் ஆகாமல் 76 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 26 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

முன்னதாக இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் பேட்டிங்கை தொடங்கினர். கடந்த ஆட்டம் போல இந்த ஆட்டத்திலும் சொதப்பிய தவான் 6 ரன்களில் பாரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வடேவிடம் கேட் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து சர்மாவுடன் இணைந்தார் விராட் ஹோலி. இருவரும் நிதானமாக ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 125 ரன்கள் குவித்த நிலையில் ஹோலி 59 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

பின்னர் ரஹானே, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்து வருகிறது.

ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தைப் போன்று இந்த ஆட்டத்திலும் சதம் அடித்தார். அவர் 124 ரன்கள் எடுத்திருந்தபோது, எதிர்பாரதவிதமாக ரன்-அவுட் ஆனார். ரஹானே பவுலருக்கு நேராக அடித்த பந்தை ஜேம்ஸ் பல்க்னர் தடுக்க முயன்ற போது, அது அவரது கையில் பட்டு விக்கெட்டை தாக்கியது. அப்போது ரன் எடுக்கும் முயற்சியில் ரோஹித் சர்மா வெளியே நின்றதால் அவுட் ஆனார்.

கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன் குவிக்கலாம் என்றிருந்த ரோஹித் சர்மா, எதிர்பாரதவிதமாக அவுட் ஆனதால் ஏமாற்றமடைந்தார். அவரது ரன்களில் 11 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

ரோஹித் சர்மா விட்டு சென்ற பணியை தன் வசம் எடுத்து கொண்டார் சக மாநிலத்தவரான ரஹானே. அதிரடியாக ஆடிய அவர் 80 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

பின்னர் வந்த அணித் தலைவர் தோனி உள்ளிட்ட வீரர்கள் ரன்களை குவிக்கத் தவறினர். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் பால்கனர் 2 விக்கெட்டுகளையும், பாரிஸ், ஹேஸ்டிங்க்ஸ், போலந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Related Posts