2 மணிக்கு வரவு செலவுத் திட்டம்!

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத்திட்டம் குறித்து ஒருபோதுமில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.

வரவு செலவுத்திட்டத்தை அனுமதிப்பது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

புதிய அரசாங்கத்தால் இன்று சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 75 வீதம் முதல் 80 வீதம் வரையான நிவாரணங்களை வழங்குவதாக அமைவதுடன், கடந்த கால வரவு செலவுத் திட்டங்களை விட 5 மடங்கு அதிகமான நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதாக அமையும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ் வரவு செலவுத்திட்டம் தமக்கான வரவு செலவுத்திட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணரும் வகையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2016 வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதோடு அரச வருமானம் 1,941 பில்லியன்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் பத்தின் விலைகள் குறைக்கவும், வறிய மக்களை பாதிக்காத வகையில் வரி அறவீடுகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், செலவீனத் தைவிட வருமானத்தை அதிகமாகக் கொண்டதாகவும் இம்முறை வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துண்டு விழும் தொகையை 6.8 வீதமாக மட்டுப்படுத்தவும், 2017ல் இதனை 6.2 வீதமாகவும் 2020ல் 3.2 ஆகவும் குறைக்க அரசாங்கம் உத்திதேசித்துள்ளது. இம்முறை வரவு செலவுத்திட்டம் 2016 – 2018 இடைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய உள்ளதோடு இதில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கு வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 306.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சிற்கு 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2015 நிதி ஒதுக்கீட்டைவிட 4 மடங்கு அதிகமாகும்.

சுகாதார அமைச்சிற்கு 3174 பில்லியன் ரூபாவும், பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கு 171 பில்லியன் ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சிற்கு 107 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் மத்திய இடைக்கால பொருளாதார கொள்கை பிரகடனம் கடந்த 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டதாகவே 2016 வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் 2016 வரவு செலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் ஆரம்பமாகிறது.

நாளை ஆரம்பிக்கும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெற்று டிசம்பர் 2ஆம் திகதி விவாதம் நடத்தப்படும்.

பின்னர் மூன்றாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று 19 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Related Posts