நல்லூர் கல்வி கோட்டத்துக்குட்பட்ட இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, நல்லூர் ஆனந்தா வித்தியாசாலை மற்றும் நல்லூர் ஞானோதயா வித்தியாலயம் ஆகியவை மூடப்பட்டமை தொடர்பில் விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன்,
இரண்டு பாடசாலைகளும் மூடப்பட்டமைக்கு என்ன காரணம் எனக் கண்டுபிடிக்க வேண்டும். யுத்த காலத்தில் வடமாகாணத்தில் எந்தப் பாடசாலைகளும் மூடப்படவில்லை. இந்நிலையில் எவ்வாறு தற்போது இரண்டு பாடசாலைகளை மூடமுடியும் என்றார்.
மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறுகையில்,
மதுபானசாலைகள் மூடப்படுவது நல்லது. ஆனால் பாடசாலைகள் மூடப்படுவது ஆரோக்கியமான விடயம் இல்லை. தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களைக் கொண்ட இந்தப் இரண்டு பாடசாலைகளும் மூடப்பட்டமையானது தவறாகும். அத்துடன், மூடப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, மூடப்பட்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆராய்வுகள் நடத்தப்படும். எடுத்தவுடன் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது என மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பதலளித்தார்.