கணணி வீடியோ கேம் ஐ தொடர்ந்து 22 நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ருஸ்டம் (Rustam) திடீரென உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த 17 வயதுடைய ருஸ்டம் (Rustam) – கம்ப்யூட்டர் கேமில் மிகவும் ஆர்வம் மிக்கவன், வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு விருப்பமான ‘டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்’ (Defence of the Ancients) எனும் வீடியோ கேமை விளையாடத் தொடங்கினார்.
போர் அரங்கம் போன்ற பின்னணியில் விளையாட வேண்டிய இந்த கேமில் கற்பனையான எதிரிகளை முறியடித்து கொல்ல வேண்டும். மிகவும் ஆர்வமாக இதனை விளையாடிய சிறுவனுக்கு நேரம் கழிவதே தெரியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம், விளையாட்டில் தோற்ற வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவனுக்கு விபத்து ஏற்பட்டது. சிறுவனின் கால் எலும்பில், முறிவு ஏற்பட்டு, படுக்கையில் இருக்க நேரிட்டது. இதனால் சிகிச்சை முடியும் வரை வீட்டில் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
வீட்டில் இருந்ததால் பொழுது போகாததால் எந்த நேரமும் வீடியோ கேமில் தனது நேரத்தை செலவிட ஆரம்பித்துள்ளான். இதே நிலை தொடர, 22 நாட்கள், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இந்த விளையாட்டில் அந்தச் சிறுவன் ஈடுபட்டார். கடந்த 30 ஆம் திகதி சிறுவனின் அறையில் வீடியோ கேம் விளையாடும் சத்தம் வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது, சிறுவன் மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்தார்.
அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்று சேர்த்ததில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்த உறைவால் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அச்சிறுவன் கடந்த ஓர் ஆண்டில் குறைந்தது 6 மணி நேரத்துக்காவது இதே போல விளையாடி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் தனிமையில் விட்டு விடுவதனால் ஏற்படும் பிரச்சினையே இது, எனவே பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், சீனாவில் 23 வயது இளைஞர் சுமார் 19 மணி நேரம் வீடியோ கேம் விளையாடி இதே பிரச்சினையால் உயிரிழந்தார் என்பது கவனிக்கத்தக்கது.