ஆளில்லாமல் பறக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் இடைவிடாது பூமியைச் சுற்றி வட்டமடித்து பறந்துவிட்டு தற்போது அமெரிக்காவில் தரையிறங்கியுள்ளது.
இந்த விண்வெளி விமானம் என்ன நோக்கத்துக்காக அனுப்பப்பட்டது, அது பறந்து என்ன பணி செய்தது என்பதெல்லாம் பெரிய ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
Orbital Test Vehicle X37Bஎன்று சொல்லப்படுகின்ற இந்த ஆளில்லா விண்வெளி விமானம் கலிஃபோர்னியாவில் தரையிறங்கியது.
அமெரிக்கா சிலகாலம் முன்புவரை பயன்படுத்திவந்த ஆள் ஏற்றிச் செல்லக்கூடிய விண்வெளி ஓடங்களுடைய (Space Shuttle) குட்டி போல காட்சியளிக்கும் இந்த விமானம், அமெரிக்க விமானப் படையின் Rapid Capablities Office எனப்படும் அவசர நடவடிக்கை அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
சரியாக 674 நாட்கள் இந்த விண்வெளி விமானம் பூமியைச் சுற்றி வட்டமடித்துள்ளது.
இந்தப் பயணத்தின் நோக்கம் மிகப் பெரிய ரகசியமாக இருந்துவருகிறது. ஆபத்துகளை குறைப்பதற்காகவும், பரிசோதனைகளை செய்துபார்ப்பதற்காகவும், திரும்ப திரும்ப பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓட தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பதும்தான் இந்த பயணத்தின் நோக்கம் என்று அமெரிக்க விமானப்படை பட்டும்படாமலும் பதிலளித்துவருகிறது.
ஆனால் சீனா விண்வெளியில் உருவாக்கிவருகின்ற ஆராய்ச்சிக் கூடத்தை கண்காணிப்பதுதான் இந்த வேவு விமானத்தின் நோக்கம் என்ற ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் நிபுணர்கள் அந்த ஊகங்களுக்கு முக்கியத்துவம் தந்து பேசுவதில்லை.
இவ்வகையான விமானம் முதலில் 2010ல் பூமியைச் சுற்றி வட்டமிட்டபோது தொடர்ந்து எட்டு மாதங்கள் பயணித்திருந்தது.
இரண்டாவது தடவையாக 2011ல் அனுப்பப்பட்டிருந்தபோது 15 மாதங்கள் பயணித்திருந்தது.
தொழில்நுட்பம் என்ன?
விண்வெளியை எட்டி ஒரு சுற்றுப் பாதையில் நிறுவப்பட்டவுடன் பூமியின் ஈர்ப்பு விசையின் சக்தியாலேயே நகரக்கூடிய வகையிலும், சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய மின்சக்தியைக் கொண்டே செயல்படும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறும்போதும் இறங்கும்போதும் மட்டும்தான் இந்த விமானத்துக்கு என்ஜின் சக்தி தேவைப்படும்.
விண்வெளிக்கு ஒரு பொதியைபொதியை எடுத்துச் செல்வதற்கான இடமும் இந்த ஆளில்லா விமானத்தில் உண்டு.
1999ல் நாசாவால் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த ஆளில்லா விண்வெளி விமானத் திட்டம், 2006ல் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தற்போது சென்றுவந்துள்ள விண்வெளி விமானத்தை உருவாக்கியது அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான Boeing ஆகும்.
அடுத்த ஆண்டு இந்த விமானம் நான்காவது முறையாக பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவும் அடுத்த சில வாரங்களில் தனது ஆளில்லா விண்வெளி விமானம் ஒன்றை பறக்கவிட்டு பரிசோதிக்கவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.