2வது போட்டியிலும் சச்சின் அணி தோல்வி: தொடரை வென்றது வார்னே டீம்

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரின் 2வது போட்டியிலும் வார்னே வாரியர்ஸ் அணியிடம் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோல்வியடைந்ததால் இந்த தொடரை இழந்தது.

ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், 3 டி20 போட்டிகள் கொண்ட, கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் அமெரிக்காவில் 3 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியும், வார்னே தலைமையிலான வார்னே வாரியர்ஸ் அணியும் மோதுவதாக முடிவெடுக்கப்பட்டது. நியூயார்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், வார்னே வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஹூஸ்டன் நகரில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த வார்னே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களை குவித்தது.

குமார் சங்ககாரா அதிகபட்சமாக 70 (30 பந்துகள்) ரன்களும், கல்லீஸ் 45, ரிக்கி பாண்டிங் 41 ரன்களும் குவித்தனர். சச்சின் அணி தரப்பில் க்ளூசினர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக்ராத், ஸ்வான், சேவாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த சச்சின் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுடன், தொடரையும் இழந்தது.

சச்சின் அணியில் ஷான் பொல்லாக் அதிகபட்சமாக 55 ரன்கள் (22 பந்துகள்) விளாசினார். அடுத்தபடியாக சச்சின் 33 ரன்கள் எடுத்து பாக். ஸ்பின்னர், சக்லைன் முஷ்தாக் பந்தில் பௌல்ட் ஆனார். சேவாக் 16 ரன்களும், கங்குலி 12 ரன்களும், லாரா 19 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக குமார் சங்ககாராதெரிவு செய்யப்பட்டார்

இத்தொடரின் கடைசி போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டோட்கர் ஸ்டேடியத்தில் வரும் 15ம் தேதி , ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

Related Posts