199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.

dhoni-south

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5 சிக்சர்), வீராட்கோலி 27 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 34 பந்தில் 68 ரன்னும் (1பவுண்டரி, 7 சிக்சர்), டிவில்லியாஸ் 32 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்கர்) எடுத்தனர்.

இந்தப் போட்டியில் நடுவர்களின் முடிவு தொடர்பாக இந்திய அணி கேப்டன் தோனி அதிருப்தி தெரிவித்தார். 17 வது ஓவரில் டுமினிக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுக்காதது தொடர்பாக சாடினார்.

சில முடிவுகள் தங்களுக்கு பாதகமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தோனி கூறியதாவது:–

நடுவர்களின் சில முடிவுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்து இருக்கா விட்டால் நாங்கள் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம். டுமினிக்கு அவுட் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. சில முடிவுகள் எங்களுக்கு பாதகமாகி விட்டது. இதனால் ஆட்டம் மாறிவிட்டது.

நாங்கள் நெருங்கி வந்து தான் தோல்வியை தழுவினோம். சிறப்பாகவே விளையாடினோம். பனித்துளியும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. பந்து வீச்சாளர்கள் அதிகமான ரன்களை விட்டு கொடுத்து விட்டனர். அவர்கள் நேர்த்தியுடன் பந்து வீசவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

16.2–வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்து டுமினியின் காலில் பட்டது. டெலிவிசன் ரீ பிளேயில் எல்.பி.டபிள்யூ தெளிவாக தெரிந்தது. கேப்டன் தோனியும், ரெய்னாவும் எவ்வளவோ முறையிட்டும் நடுவர் அவுட் கொடுக்க வில்லை. இந்தப் போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த வினித் குல்கர்னி, சம்சுதீன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார்கள்.

வெற்றி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது,

இரு அணிகளும் 200 ரன்கள் வரை குவித்ததால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பாக இருந்தது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அவருக்கு ஏற்ற வகையில் எங்கள் அணி தரப்பில் டுமினி அபாரமாக ஆடினார். அவருக்கு பெகருதீன் உதவியாக இருந்தார் என்றார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2–வது ஆட்டம் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) கட்டாக்கில் நடக்கிறது.

Related Posts