இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளான இன்று, நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றிகொண்டு தொடரை வெள்ளையடிப்பு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், தனது முதலாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 221 ஓட்டங்களையும் இலங்கை 356 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
அதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆட்டமிழக்காது கேன் வில்லியம்ஸன் பெற்ற 242 ஓட்டங்கள், வட்லிங்கின் 142 ஓட்டங்களின் உதவியோடு 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 524 ஓட்டங்களைப் பெற்று தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் நுவன் பிரதீப் 3 விக்கெட்களையும், ரங்கன ஹேரத், தம்மிக பிரசாத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
390 ஓட்டங்கள் என்ற பிரமாண்டமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் திமுத் கருணாரட்னவின் விக்கெட்டை இழந்தது. அவர் 17 ஓட்டங்களுடன் க்ரெய்க்கின் பந்துவீச்சில் ருதபோர்ட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய நாள் ஆட்ட முடிவின்போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கௌஷல் சில்வா 20 ஓட்டங்களுடனும் தம்மிக பிரசாத் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர்.
இன்று மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி, 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 193 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை.
இலங்கை அணி சார்பாக கௌஷல் சில்வா 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். லஹிரு திரிமன்னே, ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் மார்க் கிரேக் 4 விக்கெட்டுகளையும் த்ரென்ட் போல்ட், டவுக் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌத்தீ 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.