மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இழந்தது.
மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரண்டில் வெற்றி பெற்ற இலங்கை 2-0 என முன்னிலையில் இருந்ததோடு தொடரையும் வசப்படுத்திய நிலையில், இன்று மூன்றாவதும் இறுதியுமான போட்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை இரு முறைகள் மழை குறுக்கிட்டமையால், போட்டி 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்த மேற்கிந்திய தீவுகள் 206 ஓட்டங்களைப் பெற்றது.
அதிரடியாக ஆடிய அந்த அணியின் சாமுவேல்ஸ் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.
பின்னர் டக்வெல்த் லூயிஸ் முறைப்படி இலங்கைக்கு 190 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 32.3 ஓவர்களில் இலங்கை ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மீண்டும் மழை பெய்தமையால், டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.