தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்தியரான சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள முதல் ஆட்குறைப்பு இது.
இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் அது வெளியிட்டது. இது மொத்த ஊழியர்களில் 14 சதவீதமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 1.27 லட்சம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வாங்கிய நோக்கியா செல்போன் நிறுவன ஊழியர்கள் பலரை குறைக்கிறது மைக்ரோசாப்ட் மற்றும் தனது சாப்ட்வேர் நிறுவனத்தையும் கூட்ட நெரிசல் இல்லாததாக மாற்றும் நோக்கில் இதை அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட்.
நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை இதுதான். நாதெள்ளா தலைமை செயலதிகாரியாக பதவியேற்ற ஐந்து மாதங்களில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
நோக்கியா நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 12,500 பேர் இந்த நடவடிக்கையால் வேலையை இழக்கின்றனர். நோக்கியாவில்தான் மிகப் பெரிய அளவில் ஆட்குறைப்பை செய்துள்ளது மைக்ரோசாப்ட். நோக்கியாவை கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 43,200 கோடிக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்.
நோக்கியா நிறுவனம் சேர்க்கப்பட்டபோது அதன் 25,000 ஊழியர்கள் கூடுதலாக மைக்ரோசாப்ட்டில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகப் பெரிய சுமையாக மைக்ரோசாப்ட்டுக்கு மாறிப் போனது.
நோக்கியாவுக்கு அடுத்து சியாட்டில் அலுவலகப் பிரிவில் மட்டும் 1351 பேருக்கு வேலை போகிறது.
ஸ்டீவ் பாமர் தலைமை செயலதிகாரியாக இருந்தபோது கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஆட்குறைப்பின்போது 5800 பேரை வேலையை விட்டு நீக்கியது மைக்ரோசாப்ட். தற்போது நாதெள்ளா அதை மிஞ்சி விட்டார்.
இதற்கிடையே ஹெவ்லெட் பேக்கார்ட் நிறுவனமும் மிகப் பெரிய ஆட்குறைப்பில் இறங்கவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அது 50,000 பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளதாம். அந்த நிறுவனத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.