18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கைப்பேசி வேண்டாம் – பொலிஸ்

18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்று யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் உரையாற்றிய காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சிந்து பாமினி, மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார்.

police-sinthu-bamini

அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

’18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், பாடம் சம்பந்தமாக தொலைபேசியில் நண்பர்களுடன் உரையாடுவதாக இருந்தால், பெற்றோர்களும் அருகில் இருந்து அவர்கள் என்ன உரையாடுகின்றனர் என்பதிதை அவதானிக்க வேண்டும்.

தங்கள் பிள்ளைகள் தினமும் பாடசாலை சென்று வருகின்றனரா?, அவர்கள் அன்றைய தினம் பாடசாலையில் என்ன கற்றார்கள்? என்பது தொடர்பிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ‘பிள்ளைகள் பாடசாலைக்குச் செலும் வீதியில் பற்றைக்காடுகள் அல்லது பாழடைந்த வீடுகள் இருக்குமாயின் அவர்களுடன் பெற்றோர்களும் உடன் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், பாடசாலை விட்ட பின்னர் தங்கள் பிள்ளைகள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

அத்துடன், அறியாதவர்களிடமிருந்து உணவுகளை வாங்கி உண்பதையும், அவர்களுடன் பயணிப்பதையும் பிள்ளைகள் தவிர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் முன்னெடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுகள், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் வேளையில் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அறிவிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

Related Posts