அரச ஆதரவு கட்சி கூட்டமைப்பு என கூறி தேர்தல் பிரச்சாரம் – சுரேஷ் பிரேமசந்திரன்

suresh-peramachchantheranஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள வடக்கு மாகாண தேர்தலின் போது இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றோம். இதனை நாம் தேர்தல் ஆணையாளருக்கும் கூறியிருந்தோம். அவர் அதற்கு இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விடயம் எனவே நான் இராணுவத்தை முகாம்களுக்குள் முடங்க சொல்ல முடியாது என கூறினார்.

தற்போது இராணுவத்தினர் தேர்தல் பிரச்சார வேளைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அண்மையில் கூட நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவி வழக்கும் நிகழ்வில் ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவர் கலந்து கொண்டார். அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகளை இராணுவத்தினர் மிரட்டிய சம்பவமும் இடம்பெற்றது.

தற்போது ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற அரசின் ஆதரவு அமைப்பு தம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பு என கூறி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது. துண்டு பிரசுரங்கள் சுவரொட்டிகள் என்பனவும் ஒட்டப்பட்டுள்ளன. இது கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகளை உடைக்கும் செயற்பாடே.

இந்த அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற எமது கட்சியின் பெயரை பாவித்து பிரச்சாரங்களில் ஈடுபடுவது பற்றி தேர்தல் ஆணையாளரிடம் அறிவித்துள்ளோம்.

அதேவேளை தேர்தல் அதிகாரிகளாக (SPO) முஸ்லீம், சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தேவையான தமிழ் அதிகாரிகள் இருக்கும் போது இவ்வாறு முஸ்லிம் சிங்கள அதிகாரிகளை நியமித்தது தொடர்பில் எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

வாக்குசாவடிகளில் இருக்க போகும் இந்த அதிகாரிகள் நினைத்தால் தேர்தல் மோசடிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உண்டு. இவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் இலகுவாக கள்ள வாக்கு போடுவது போன்ற மோசடிகள் இடம்பெறலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts