நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்விகளை முன்வைத்திருந்தார்.
குறிப்பாக ”யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதும் , இம் மோதலுக்கான மூலக்காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை எனவும், இன்னமும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சவாலான நிலையிலேயே காணப்படுகிறது எனவும் சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவும், அரசியல் கைதிகளை எப்போது விடுதலை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும், நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுமா? எனவும் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இரா. சாணக்கியனின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய
” யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்து விட்டன எனவும், இக் காலத்தில் பலர் ஆட்சிக்கு வந்தனர் எனவும், ஆனால், எமக்கோ 16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது மிகவும் சிக்கலானதொரு விடயமாகும் எனத் தெரிவித்த பிரதமர் ” குறித்த விடயம் தொடர்பாக தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ” ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் தமது உறுதியான நிலைப்பாடு எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.