16% க்கும் அதிகமான பல்கலை மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்!!

அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் வெளிவந்துள்ளது.

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த செயற்பாடுகள் கவலையளிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

51% க்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3% உளவியல் வன்முறைக்கும், 23.8% உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.

ஊழியர்களில் 44% பேர் வாய்மொழி துஸ்பிரயோகத்திற்கும், 22.3% பேர் பாலியல் இலஞ்சம் கோரியதாகவும், 19.9% ​​பேர் உடல்ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 21% பேர் வாய்மொழி பாலியல் துஸ்பிரயோகத்திற்கும், 1.5% பேர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பகிடிவதை என்பது முதலாவது ஆண்டில் மட்டுமே நடப்பதாகக் கருதப்பட்டாலும், அவை தொடர்வதாகவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் மேலதிக விதிமுறைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வகுத்துள்ளது.

அதன்படி, சம்பவங்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை, வெளியேற்றப்படுதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நஷ்டஈடு செலுத்துதல் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு புதிதாக இணைத்துகொள்ளும் மாணவர்களை துன்புறுத்துவதில் ஈடுபட மாட்டோம் என அனைத்து மாணவர்களும் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும் என்பது மேலதிக நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Posts