Ad Widget

16வது தமிழ் இணைய மாநாடு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 25 26 27 திகதிகளில் கனடாவில் நடைபெறும்

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘தமிழ் இணைய மாநாடு’ இவ்வாண்டு கனடாவின் தொரண்டோ நகரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை  நடைபெற உள்ளதாக ஏற்கனவே உத்தமம் அறிவித்திருந்தது. மாநாட்டு தலைவராக உத்தமத்தின் உறுப்பினரும் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியருமான செல்வக்குமார் அறிவிக்கப்பட்டிருநதார்

மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முடிவுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள கட்டுரைகள் அறிவிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்
மாநாட்டு உள்நாட்டு ஏற்பாட்டுக்குழுவில் நியமிக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த கனடா நாட்டைசேர்ந்த இலங்கையரான  செந்துாரன் நடராஜா என்பவரால் உத்தமம் அமைப்பின் முடிவுக்கு மாறான வகையிலும் மாநாட்டுக்குழுவின் தலைவரின் அறுவுறுத்தலையும் மீறி மாநாட்டுக்குரிய திகதிகள் மாற்றப்பட்டு மாநாட்டுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளம்(INFITT.ca ) ஊடாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த இணையத்தளமானது உத்தமம் அமைப்பின் பெயரில் பதிவு செய்யப்படாமல் தனிப்பட்ட ரீதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த செந்துாரன் நடராஜா செயற்பட்டு வருவதால் உத்தமம் அமைப்பு மேலதிக நடவடிக்கைககளுக்கு தயாராகி வருவதாகவும் தெரிய வருகின்றது

இது குறித்து உத்தமம் செயற்குழு கடந்த ஜூலை மாதம் 7ம் திகதி மாநாட்டு திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் மாநாட்டுக்கான தகவல்களை மாநாட்டின் வழமையான உத்தியோகபூர்வ இணையத்தளமான tamilinternetconference.org ஊடாக பார்வையிடலாம் எனவும் அறிவித்திருந்தபோதும் இதுவரை செந்துரன் என்பவரால் பொய்ப்பிரசாரங்கள் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கும் பிரத்தியேக இணையத்தளத்தில் பதிவுசெய்தவர்களுக்கும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு நிதிசேரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் உத்தமம் உறுப்பினர்களும் மாநாட்டுக்குழுத்தலைவரான செல்வகுமார் அவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே செந்துாரனுக்கு மாநாட்டுக்குழுவின்தலைவரால் வழங்கப்பட்ட பணம் தவறான வழியில் செந்துாரனால் எவ்வித அனுமதியும் இன்றி பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

உத்தமம் 2000 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டதாகும். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமானது அரசு சார்பற்ற பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப ஆளுமைகள், தமிழ்க் கணிஞர்கள், நிரலாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கணினி ஆர்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்கள் சந்திக்கும் தளத்தினை நேரடியாகவும் மின்னியல் வழியும் நடைமுறைப் படுத்துவதை தனது நோக்கமாக உத்தமம் கொண்டுள்ளது.

16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் கருப்பொருளாக “ஆழ்த்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)” மற்றும், “தமிழில் தரவு அறிவியல் (Data Science)” ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 15 ஆண்டுகளாக இம்மன்றத்தின் சார்பில் ஆய்வரங்கம், கருத்தரங்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அந்த அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களால் குழப்பமடையாமல் உத்தமம் அமைப்பின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.infitt.org இல் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டுக்குழுவின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்

www.infitt.org  தவிர்ந்த எந்த இணையத்தளங்கள் ஊடாகவும் மாநாடு தொடர்பில்  பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் உத்தமத்தின் செயலகம் மற்றும் மாநாட்டுத்தலைவர்  தவிர்ந்த எவருடனும் மாநாடு தொடர்பில்  உடன்படிக்கை மேற்கொள்ள  கொள்ளவேண்டாம் எனவும் அதற்கு பொறுப்பு கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இது தொடர்பில் எழுந்த சர்ச்சைகளின் பின்னர்  உத்தமம்  அமைப்பின் புதிய தலைவராக இந்தியாவைச்சேர்ந்த திரு செல்வ முரளி அவர்களும் புதிய செயல் இயக்குனராக  இலங்கையினை சேர்ந்த தவரூபன் அவர்களும்  செயற்குழுவால் தெரிவு செய்யப்பட்டு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

Related Posts