படகில் ஆஸ்திரேலியா சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தஞ்சக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா தமது நிலப்பரப்புக்கு கொண்டு சென்று அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் வெளியிட்டுள்ளார்.
இந்த தஞ்சக் கோரிக்கையாளர்களை ஒரு மாதத்துக்கும் அதிகமான காலமாக ஆஸ்திரேலியா கடலிலேயே தடுத்துவைத்திருந்தது.
இவர்கள் நடத்தப்படும் விதம் பற்றி மனித உரிமை குழுக்கள் கவலை எழுப்பியிருந்தன.
ஆஸ்திரேலியா இவர்களை கடலில் இருந்து அப்படியே இலங்கைக்கு திருப்ப ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இம்மாதத்தில் முன்னதாக இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படகில் இருந்தவர்களில் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்படகு தனது பயணத்தை இந்தியாவில் இருந்து துவங்கியிருந்ததால், அதிலுள்ள தமிழர்களை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அனுப்பிவைக்கவும் முயற்சித்திருந்தது.
ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் இது சம்பந்தமாக இந்தியாவுடன் பேசியிருந்தார்.
இவர்களை எடுத்துக்கொள்ள இந்தியா மறுத்துவிட்டதாக இந்த அகதிகளின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவருபவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான் அவர்களை ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கே கொண்டுசென்று தடுத்துவைத்து விசாரிக்க ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.