ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி படகில் சென்றநிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள 153 பேர் தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றம் ஒன்றில் நடந்துவரும் நிலையிலேயே, அரச தரப்பு வழக்கறிஞர்கள் இந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.
அத்தோடு வழக்கு நடந்துமுடிந்த பின்னரே 72 மணிநேர முன்னறிவித்தலுடன் மூன்றாவது நாடொன்றுக்கு இவர்கள் அனுப்பப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையர்கள் அனைவரையும் ஆஸ்திரேலிய மண்ணுக்கு கொண்டுவர உத்தரவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையொன்றும் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் தமது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை ஆஸ்திரேலிய அரசு கடந்தவாரம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது.
அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவதாக இருந்தால், 72 மணி நேர முன்னறிவித்தல் கொடுக்கப்படும் என்று அப்போது அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் எவ்வளவு காலத்தில் முடிவுக்கு வரும் என்ற தெளிவுகள் இல்லாதபோதிலும், ஜூலை மாத இறுதிக்குள் திடமான முடிவொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸின் அகதிகள் தொடர்பான செயற்பாட்டாளர் பாலா விக்னேஸ்வரன் கூறினார்.