150க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்!

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகின்றன.

t-velmurugan

இது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தார்கள் என்கிற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி 5 ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்தது.

தமிழினத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டு நரவேட்டையாடும் சிங்களப் பேரினவாத கடற்படை, 5 அப்பாவி மீனவர்கள் மீது போதைப் பொருட்களைக் கடத்தினார் என்ற அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் அடைத்தது.

5 அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி தமிழக அரசு எத்தனை எத்தனை கடிதங்கள் எழுதியது? ஒரே ஒரு கடிதத்துக்குக் கூட மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்த 3 ஆண்டு காலத்தில் இந்தியா- இலங்கை இடையே எத்தனை எத்தனை சந்திப்புகள் நடைபெற்றன? ஒரு முறையேனும் இந்த பிரச்சனையை இலங்கையின் கவனத்துக்கு இந்திய மத்திய அரசு கொண்டு சென்றதில்லை.

தமிழ்நாடு எனும் மாநிலம் தனிநாடு என்பதைப் போல இந்த மாநில அரசே வெளிநாடு ஒன்றில் வழக்கை நடத்திக் கொள்ளட்டும் ஏதோ ஒரு தீர்ப்பை வாங்கிக் கொள்ளட்டும் என்று மாற்றாந்தாய் மன்பான்மையோடு நடந்து கொண்ட காரணத்தால்தான் மட்டுமே இன்று 5 அப்பாவித் தமிழக மீனவர்கள் தூக்கு மேடையில் நிற்கிறார்கள்.

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் கொல்லப்பட்டபோது துடிதுடியாய் துடித்த இந்தியப் பேரரசின் நெஞ்சம் சிங்களவனால் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது துடிக்கவில்லை- ஈவிரக்கம்கூட காட்டவில்லை. தமிழ்நாட்டு மக்களை இந்தியாவின் குடிமக்களாகக் கருதாத ஒரே காரணத்தால்தான் சிங்கள பேரினவாதிகள் ஆணவத்தின் உச்சத்திலே நின்று தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து வரலாற்றுப் பகை தீர்க்க முயல்கிறார்கள்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்மான உணர்ச்சிகளை கிஞ்சிற்றும் மதிக்காது அலட்சியமாக இந்தியப் பேரரசு செயல்பட்டதால்தான் எங்களது தமிழகத்து உறவுகள் இன்று எதிரியின் தேசத்தில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

இத்தனை காலமும் வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டு இப்போதாவது, தமிழக மீனவர்கள் போதைப் பொருட்களை கடத்தினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை- கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதியையாவது செயல்படுத்தி 5 தமிழரது உயிரை மீட்டு மிகச் சிறிய அளவிலான ஆறுதலையாவது இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டு குடிமக்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.

மத்திய அரசின் எத்தனையோ துரோகங்களின் வடுக்கள் இன்னமும் ஆறாத புண்ணாக இருந்த போதும் இருந்த தருணத்திலாவது இந்திய மத்திய அரசு தனது தவறுகளுக்கு பிராயசித்தமாக 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டுத் தமிழன் தனித்துவிடப்பட்டவன்; தட்டிக் கேட்க நாதியில்லை என்ற கொக்கரிப்பில் சிங்களப் பேரினவாதம் 5 அப்பாவி தமிழருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். சிங்கள் பேரினவாதத்தின் இந்த அகம்பாவத்துக்கும் தமிழினத்தை ஆகக் கூடிய சாத்தியங்களால் எல்லாம் அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நடாத்துகிற அட்டூழியங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து ஆணவத்தை வெளிப்படுத்தியிருக்கும் ராஜபக்சே கும்பலுக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையிலே இருக்கும் சிங்கள பேரினவாத அரசின் தூதரகத்தை அகற்றும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (31.10.2014) சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போரை நடத்துவோம்! ஜாதி, மத, கட்சி எல்லை கடந்து அனைத்து தமிழர்களும் தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு தமிழர் தம் உணர்வையும் ஒற்றுமையும் இன எதிரிகளுக்கு புரிய வைப்போம் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அன்புடன் அழைக்கிறது!

Related Posts