15 நிமிடங்களுக்குள் இளைஞனை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்!

“பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பகுதியால் பாய்ந்த குண்டு இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்துள்ளது. மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சென்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்”

இவ்வாறு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை பெருநாள் இடம்பெற்றது. அதன்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டது.

இதன்போது குழப்பநிலையை தடுக்க முற்பட்ட அவ்வழியே சென்ற சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனே மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

“இளைஞனின் முதுகுப் பக்கதால் பாய்ந்த சென்ற குண்டு அவரின் இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியேறியுள்ளது. அத்துடன் மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் ஸிலீப்பாகிச் சென்றுள்ளது.

இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

நுரையீரல் பகுதியிருந்து அதிகளவு குருதிப் போக்கால்தான் இளைஞன் உயிரிழந்துள்ளார். 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்.

இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் கொட்டானால் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளன. இளைஞன் தாக்குதலுக்குள்ளாகிதால் அவரது உடைகள் கிழிவடைந்துள்ளன.

மேலும் அவர் மதுபோதையில் இருந்துள்ளார். அவரது குருதியில் அல்ககோல் செறிவு அதிகமாக காணப்பட்டது” என்று உடற்கூற்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts