15 ஆண்டுகளுக்குப் பின் அஜீத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி?

தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன் அஜீத் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வேதாளம் படத்திற்குப் பின்னர் அஜீத் 2 மாதங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு லண்டன் செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் அடுத்து நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் அஜித்தை இயக்கப் போகும் அடுத்த இயக்குநர்கள் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் அடிபட்டு வருகிறது.

வேதாளம் படப்பிடிப்பில் காலில் பட்ட பலத்த அடியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் தற்போது அஜீத் ஓய்வெடுத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் சென்று 2 மாதங்கள் ஓய்வெடுக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

லண்டனில் இருந்து அஜீத் திரும்பி வந்தவுடன் விஷ்ணுவர்த்தன், சிறுத்தை சிவாவுடன் இணையும் அவரது அடுத்த பட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தல என்ற அடையாளத்தை தனது தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு கொடுத்த ஏ.ஆர்.முருகதாசசுடன் அஜீத் இணையப் போவதாக கூறுகின்றனர். 2001 ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் இந்தக் கூட்டணி இணையவில்லை.

அஜீத்- ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கவிருக்கிறாராம். உதயநிதி கடைசியாக முருகதாசின் 7 ம் அறிவு படத்தைத் தயாரித்து இருந்தார்.

இந்தப் படத்தின் கதையை அஜீத்திடம் சொல்லி முருகதாஸ் சம்மதம் வாங்கி விட்டாராம். முருகதாஸ் தற்போது இயக்கி வரும் அகிரா மற்றும் மகேஷ்பாபு படங்களுக்குப் பின் இந்தப் படத்தை இயக்க அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

2017 ம் ஆண்டில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இது சாத்தியமாகும் பட்சத்தில் முருகதாஸ்- அஜீத் 15 வருடங்களுக்குப் பின் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரமாண்ட கூட்டணி சாத்தியமாகுமா? பார்க்கலாம்.

Related Posts