இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் அதிபாதுகாப்பு வலையத்திலுள்ள பலலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு விசேட பூஜை இடம்பெறவுள்ளது. இந்த பூஜையில் ஜனாதிபதியும், பிரதமரும் பங்கேற்கவுள்ளனர்.
இதனையடுத்து மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும் இருவரும் பங்கேற்கவுள்ளனர்.
பொங்கல் விழா நிகழ்வுக்கு முன்னர் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறும் விசேட கூட்டத்தில் பொதுமக்களின் காணிகளை மீள கையளிப்பது மற்றும் மீற்குடியேற்றம் தொடர்பில் படைத்தரப்பினருடன் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயம் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.