கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான காடையர்கள் இணைந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள் உட்பட சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுத்தினர்.
இந்த சம்பவத்தை அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் யாரையும் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை.
எனினும் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள முஸ்லிம் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனை அவதானித்த சுஜீவனி, வன்முறையாளர்களுக்கு மத்தியில் களமிறங்கியுள்ளார்.
குறித்த வீடுகளில் இருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாதுகாப்பு வழங்கிய சுஜீவனி, வன்முறையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனது ஆயலவர்களின் வீடுகளை சேதப்படுத்த வேண்டாம். அவர்கள் எங்கள் மக்கள். வீடுகளை உடைக்க வேண்டாம் என்று கோபத்துடன் கூச்சலிட்டுள்ளார்.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற வன்முறையின் போது 3 வீடுகளை சேர்ந்த 14 பேரின் உயிரைக் காப்பாற்ற சுஜீவனி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த 3 குடும்பங்களின் வீடுகளுக்கும் எவ்வித சேதம் ஏற்படுவதற்கும் சுஜீவனி இடமளிக்கவில்லை.
வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் சுஜீவனியின் அடைக்கலம் புகுந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு சென்றனர். வன்முறையில் தங்கள் வீடுகள் சேதமின்றி காப்பாற்றப்பட்டமை குறித்து முஸ்லிம் மக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
500 காடையர்கள் வரை நுழைந்த கூட்டத்திற்கு மத்தியில் சுஜீவனி எங்களை காப்பாற்றியது ஆச்சரியமாக உள்ளதென காப்பாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்கள் நன்றியையும் அவர்கள் சுஜீவனிக்கு தெரிவித்துள்ளனர்.