14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

1998ஆம் அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் சிவிலியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, சரஸ்வதி சௌந்தரராஜன், முத்துப்பிள்ளை ஜெயசீலன் ஆகிய இரு சிவிலியன்களை, அச்செழு பகுதியில் நிலைகொண்டிருந்த 511 படையணியில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய்கள் சந்தேகத்தில் கைதுசெய்திருந்தனர்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவர் தொடர்பில் தகவல் எதுவும் இராணுவத்தினர் வெளியிடவில்லை. இதனையடுத்து இவ் இருவரும் காணாமல் போயிருந்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இராணுவப் பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன்படி 511 படையணியில் கடமையாற்றிய சிப்பாய்களான வீரசிங்க ஆராச்சிலாகே ரசிக்க குமார விரசிங்க, ரணவக்க ஆராச்சிலாகே மஞ்சுள சமன்குமார, ரசம்பலாகே தொன் சுனில், பேதுரு ஆராச்சிலாகே பிறேமதிலக, விதான கம்கானம்லாகே சுபாஸ், கம்மே லியாகே ஜெகத்குமார, ரத்நாயக்க முதியன்சலாகே சனத்தயானந்த ரத்நாயக்க, கேகுபிட்டியகே பிறேமஜெகத், சரத் கொடிகே பிரசன்ன உதயகுமார பீரிஸ், புலக்குட்டி ரலலாகே திலகரட்ண, சிங்கரட்ண பண்டார நாயக்க முதியன்சலாகே சமன் அசோக்ஹேரத், ஹிஸ்ரட்ணலாகே சமரசிங்க, பகிராலலாகே ஜெனக்க ஜெயந்த, ஜெயக்கொடி ஆராச்சிலாகே நிஹால் ஜெயக்கொடி, பொரமே கெதிர நிஹால் கருணாதிலக, கலப்பிட்டியலாகே தனிதரே ஆகியோருக்கு எதிராக அப்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தவணை முறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts