நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த தீர்ப்பு தொடர்பாக அவர்நேற்று(திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை.
ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ‘புதிய யாப்பு’ என கூறுகின்றது.
ஆளுநர் அரசாங்க முகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர். மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
இனியாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா?” என தெரிவித்துள்ளார்.