யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரையில்,
13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, அதற்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்று அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே எமது அரசியல் இலக்கு. இதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையும்.
இதையே நான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் தொடக்கம் வலியுறுத்தியும், வாதாடியும் வந்திருக்கிறேன்.
ஆனாலும், 13 வது திருத்தச் சட்டம் என்பது அரைகுறைத் தீர்வு என்றும், ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களின் அழுத்தங்கள், அவர்கள் கொண்டிருக்கும் வழமையான அரசியல் தீர்விற்கு எதிரான நிலைப்பாடு என்று ஒருபுறமும், அந்த அழுத்தங்களை எதிர்கொண்டு, அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த துணிச்சல் இல்லாத கடந்தகால ஆட்சி தலைமைகள் என்று மறுபுறமும்… எமது மக்களை அரசியல் தீர்வின்றி அவலங்களோடும், அழிவுகளோடும் நடுத்தெருவில் நிற்க வைத்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில், கடந்த காலங்களில் கிடைத்த அரிய வாய்ப்புக்களைத் தாங்கள் தட்டிக் கழித்து தவறு செய்து விட்டதாகவும், உணர்ச்சியூட்டும் அரசியலால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இயலாது என்றும் கூறியிருந்தார்.
ஆகவேதான் எமது மக்களின் அழிவுகளுக்குக் காரணமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ற உண்மையை நான் இன்றுவரை உரக்கவே சொல்லி வருகின்றேன்.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இன்றைய அரசாங்கமே 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
இத்தனை அழிவுகளுக்குப் பின்னராவது எமது நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்திருப்பது, கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் இருந்தாலும், அவர்களின் வரவை நான் வரவேற்றிருந்தேன்.
முன்னர் தாமே இழித்துரைத்து தூற்றித் திரிந்த 13 வது திருத்தச் சட்டத்தை ஏற்பதற்கு ஒப்பாக, மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிட முன் வந்தபோது பட்டமரத்தில் இருந்து பால் வடிகிறதே என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கவில்லை.
நான் நினைத்தது போலவே இன்று எமது மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது.
மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிட முன்வந்தது தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக அல்ல என்பதும் இப்போது வெளிச்சமாகிவிட்டது.
மாகாண சபை அதிகாரம் எமது கைகளில் கிடைத்து விட்டால் அது சரியான திசைவழி நோக்கி சென்றுவிடும் என்று என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அச்சமடைகிறார்கள் என்ற உண்மையும் இப்போது வெளிப்பட்டுவிட்டது.
ஆகவே, மாகாண அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டால், அதைத் தாமே முடக்கி வைத்திருப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதாலேயே அவர்கள் தேர்தலில் போட்டியிட வந்திருந்தார்கள் என்பதும் இப்போது அம்பலப்பட்டு விட்டது.
13 வது திருத்தச் சட்டமானது ´மயிலேமயிலே இறகுபோடு´ என்று நாம் இரந்து கேட்ட பிச்சை அல்ல. அல்லது கொழும்பு கறுவாக் காட்டில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எமக்கு எடுத்துத் தந்ததும் அல்ல.
இது எங்கள் அனைவரினதும் நீதியான ஆரம்பகால உரிமைப் போராட்டத்தின் பயனாக எமக்கு கிடைத்த வரம்.
எமது ஆரம்பகால நீதியான உரிமைப் போராட்டத்தின் வலியும், வதையும் அதில் பங்கெடுத்து உணர்ந்து கொண்டவர்களுக்கே 13 வது திருத்தச் சட்டத்தின் பெறுமதி என்னவென்று தெரியும்.
இன்று வட மாகாண சபை என்பது பன்றிக்கு முன்பாக வீசப்பட்ட முத்தாகவே இருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், அவர்களின் தலைமையிலான வட மாகாண சபையின் ஆட்சியாளர்களினதும் பொறுப்பற்ற செயலால் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான நிதி அரசாங்கத்தின் திறைசேரிக்குத் திரும்பிச் செல்கிறது.
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு இன்னமும் சரியாக ஒழுங்கு படுத்தப்படவில்லை என்று இணைத்தலைவர் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.
அது உண்மை என்றால் யார் அதற்குப் பொறுப்பு?… வந்த நிதியைத் திரும்பிச் செல்ல வைக்கின்ற வட மாகாண சபை அதற்குப் பொறுப்பா?
அல்லது, ஏனைய மாகாணங்களை விடவும் 2014, 2015 இற்கான நிதி ஒதுக்கீட்டில் அதி கூடிய நிதியை வட மாகாண சபைக்கே ஒதுக்கி கொடுத்த அரசாங்கம் அதற்குப் பொறுப்பா?…
இந்த விடயம் குறித்து நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பகிரங்க விவாததத்திற்கு அழைத்திருந்தோம்.
எமது மக்களின் முன்பாக நீங்களும் வந்து உங்கள் கருத்தைக் கூறுங்கள், நாமும் எங்கள் கருத்தைக் கூறுகின்றோம். எது உண்மை என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
ஆனாலும், தம்மிடம் உண்மை இல்லை என்பதால் எமது பகிரங்க விவாதத்தை ஏற்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்து வருகிறது.