தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழரசு கட்சியின் ஆரம்ப கால உறுப்பினருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 25 ஆவது நினைவு தினம், நேற்று யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் சிற்றம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் இதுவரை காலமும் பட்ட கஷ்டங்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வையே பெற்றுக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியில் சுழற்சி முறையிலான ஆட்சியுமான சமஷ்டி அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு தேவை.
இதனையே நாம் 1949ம் ஆண்டு முதல் வலியுறுத்தியும் குரல் கொடுத்தும் வருகின்றோம். அதனையே இன்றும் நாம் வலியுறுத்தியும் குரல் கொடுக்க வேண்டும்.
ஒன்றுமே இல்லாத 13ம் திருத்தத்தை பற்றி நாம் கதைப்பது குரல் கொடுப்பதும் பயனற்றது 13ம் திருத்தம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்டது அல்ல. அதனை இலங்கை இந்திய இணைந்து கொண்டு வந்தது. அதனை பற்றி நாம் இப்போது கதைப்பதும் குரல் கொடுப்பதும் பயனற்றது.
எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக நாம் சுயாட்சியையே வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை எனவும் அவ்வாறு அவை மீண்டும் இணைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டு சிங்கள விகிதாரசாம் அதிகரித்துள்ளது. எனவே அதனை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதை விரும்பவில்லை என அவர் கூறினார்.