13ம் திருத்தத்திற்கு அப்பால் வடகிழக்கு இணைந்த தீர்வினை நாடுமா வடமாகாணசபை?: பீடாதிபதி எஸ்.சத்தியசீலன்

புத்திசாலித் தனமான வகையிலே 13வது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று வட கிழக்கு இணைந்த சமஷ்டி மூலமான ஓர் தீர்வை முன்வைப்பது இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும் சிறந்தது என யாழ்.பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் பீடாதிபதி எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பட்ட துன்பங்களின் எதிர்விளைவாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளும் அதேவேளை, மக்களின் ஆணையினை மத்தியில் உள்ள அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில்,

அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றிருக்கின்றது. இந்த வெற்றியை இலங்கை அரசாங்கத்தில் இருப்போர் ஆரோக்கியமான வகையிலே பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது. இதுவரை காலமும் தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பட்ட துன்பங்களின் எதிர் விளைவாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

பல்வேறு நெருக்குதல்களுக்கு மத்தியில் இத் தேர்தல் நடந்தாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கண்காணிப்பாளர் பிரசன்னத்துடன் பெரியளவான குளறுபடிகள் இல்லாமல் தேர்தல் நடைபெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் அளித்த வாக்கு என்பது இதுவரை பட்ட கஸ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மூல காரணமானவர்களுக்கு எதிராகத் தான் அமைந்தது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கமும் இத் தேர்தல் முடிவுகளை இலங்கை வாழ் குடிமக்களின் ஒட்டுமொத்த முடிவுகளை நன்மை கருதி சாதகமாகப் பயன்படுத்தி இதுவரை இருந்து வருகின்ற பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமான வகையிலே கூடியளவு அதிகாரப் பகிர்வினை வழங்கி இலங்கை மக்கள் என்ற வகையில் சகல இனங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

இலங்கையில் பௌத்த சிங்கள மக்களுக்கு எந்த எந்த அதிகாரங்கள் இருக்கின்றனவோ அதே போல் ஏனைய சிறுபான்மையின மக்களுக்கும் அதே அதிகாரங்கள், உரிமைகள் இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையுடன் காத்திரமான அரசிலை நடத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நாகரீகமற்ற அரசியலைக் கைவிட்டு இலங்கை முழுவதுமுடைய ஒட்டுமொத்த நன்மை கருதி புத்துசாலித்தனமான கனவான் தன்மையுடைய அரசியலை நடத்துமாறு இலங்கையின் அதிகாரத்தில் இருப்பவர்களை வேண்டிக்கொள்கின்றேன்.

அதேநேரம் வடமாகாண சபையில் கிடைத்த வெற்றியை தாங்கள் சேவைகளுக்கோ அல்லது இதுகாலவரையில் செய்த சேவைகளுக்கோ பிரசாரத்திற்கோ கிடைத்ததாக எண்ணாது தமிழ்த் தேசிய அமைப்பும் தந்தை செல்வநாயகம் அவர்கள் வளர்த்த தமிழ்த் தேசியத்தினைப் பின்தொடர்ந்த தமிழ்த் தேசிய அடையாளத்தினைப் பேணுகையில் தான் இந்தத் தேர்தலிலே போட்டியிட்டவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றார்கள்.

எவ்வளவோ தரப்புக்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள், அதனிடையே தமிழ் மக்களுக்கு விரும்பத்தகாதவர்கள் கூட இத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். இந்தத் தமிழ் பேசும் மக்கள் எல்லாவற்றினையும் மறந்து கூட்டமைப்பு என்ற அடையாளத்தின் ஊடாக தமது அரசியல் அபிலாசையினையும் தெளிவினையும் இந்த நாட்டு மக்களுக்கும் வெளியுலகிற்கும் காட்டியுள்ளது மிகப்பெரிய பாராட்டத்தக்க ஒன்றாகும்.

எனவே புத்திசாலித் தனமான வகையிலே 13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று வட கிழக்கு இணைந்த சமஷ்டி மூலமான ஓர் தீர்வை முன்வைப்பது இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும் சிறந்தது என்று நம்புகின்றேன்.

Related Posts