13ஐ திருத்த தேவையில்லை: இந்திய எம்.பி.க்கள்

indian-visit5இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் வடமாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தியே ஆக வேண்டும் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் வந்து இங்கு நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் சிவில் சமூகத்தினரைச் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட இந்திய குழுவினர், அதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அக்குழுவினர், ‘இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக’ உறுதியளித்தனர்.

இந்த மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் மேலும் அங்கு குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது, வடக்கில் இடம்பெறும் காணி விவகாரங்கள், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல், யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயக் காணிகள் சுவீகரிக்கப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலை அடுத்து, மேற்படி குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்து, இந்திய அரசாங்கத்தின் உதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசாங்கமும் அதன் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகிய தீவிர செயற்பாடுகளில் குதித்துள்ள நிலையிலேயே இந்திய எம்.பிக்கள் குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு ஆளுநருடன் இந்திய எம்.பிக்கள் சந்தித்துப்பேச்சு

இந்திய பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம்

இந்தியக் குழுவினரின் அரியாலை விஜயம்

Related Posts