13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளையும் அதை எந்தளவுக்கு பாவிக்க முடியுமென்பதையும் ஆராய்ந்த பின்னரே தாங்கள் தேர்தலில் போட்டியிட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தங்குமிட விடுதி திறப்பு விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.
வடமாகாண முதலமைச்சர் அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறிச் செயற்படுவதாகவும் 13ஆவது திருத்தத்தை வாசிக்க வேண்டுமென்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரியிருக்கின்றார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தயாசிறி சொன்ன கருத்துக்கு நான் பதில் எதுவும் கூறவில்லை. இருந்தாலும், வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளையும் அதை எந்தளவுக்கு பாவிக்க முடியுமென்பதையும் ஆராய்ந்த பின்னர்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம்.
13ஆவது திருத்தச் சட்டம் பற்றி பலர் பல்வேறு விதமாகக் கூறினாலும், வடமாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்கே அது கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கிலேயே அதனை நாம் பார்க்க வேண்டும். உங்களுக்கும் அதிகாரம் இல்லையெனவும் எங்களுக்கும் அதிகாரம் இல்லையெனவும் அவர் சொல்கின்றார். அதை ஏற்றுக்கொள்ளுகிறேன். எப்பொழுதும் நாங்கள் தான் கேட்டிருந்தோம் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு. அதனை எங்களுக்குத் தரவிட்டால் அதனால் எந்த பயனும் இல்லை.
தயாசிறி போன்றவர்கள் வேறு விதமாகத்தான் நினைக்கின்றார்கள். மாகாணசபை அவர்களின் இடங்களுக்கு தேவையில்லை. எங்களுக்குத்தான் தேவை. அந்த அடிப்படையில் தயாசிறி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையில் நாங்கள் இல்லாத உரித்துக்களைக் கூட எந்தளவு பாவிக்க முடியுமென்ற எண்ணத்தில்தான் சேர்ந்து அவற்றைச் செய்யப் பார்க்கின்றோமே தவிர, அது எங்களுக்கு எந்தவிதமான உரித்துக்களையும் தருவது போல் இல்லை. ஆனால், எங்களால் இயலுமான அளவு அதனை எடுக்க வேண்டும்.
அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்குதான் நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை கேட்டோம். தயாசிறி சொல்கின்றார் எங்களுக்கும் இல்லை தானே உங்களுக்கு இல்லை என்றால் என்னவென்று. இதில் அவர் ஒரு விடயத்தை புரிய வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் தேவையில்லை. எங்களுக்குத் தான் தேவை.
13ஆவது திருத்தச் சட்டத்தின் குறைகளை தயாசிறி நினைத்துள்ளார். அதில் ஏதோவொரு உரித்து இருக்கலாமென்று அவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவருக்கு 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு வித்தியாசமான கோணத்தில் தென்படும். ஏனெனில், அவரும் அரசாங்கமும் ஒரே கட்சியாக இருக்கின்றபோது கேட்கிறதை அரசாங்கம் அவருக்கு வழங்கும்.
நாங்கள் தான் (வடமாகாண சபை) முதன்முதலில் கட்சி, மொழி, மதம், கலாசாரம் என்ற வகையில் வித்தியாசமானவர்களாக ஆட்சிக்கு வந்துள்ளோம். நாங்கள் கேட்பதை கொடுக்காமலிருக்கும் நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றார்.