13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்

daklasஅரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தீர்வுகாணப்படவேண்டும் என்று நாம் நீண்ட காலமாக கூறி வருகின்றோம். எனவே எமது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

தமிழ் மக்கள் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நிலைமையை சந்திக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

எனவே ஒரு முட்டையிட்டதும் ஊரெல்லாம் கொக்கரிக்கும் கோழியைப் போல எம்மால் செயற்பட முடியாது. அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து அமைதியாகவே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் வடமாகாண தேர்தல் தொடர்பாக கருத்து கேட்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:-

வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் அத்தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் நாம் எமது கட்சியின் ஆதரவாளர்களுடனும் கட்சி மட்டத்திலும் ஆராய்ந்து வருகின்றோம்.

எமக்கென்று இரு கொள்கை இருக்கின்றது. அதேபோன்று அரசியல் பலமும் இருக்கின்றது. ஆகையால் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

எனவே வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் விடுக்கப்பட்டதும் நாம் வடமாகாண தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது தொடர்பில் அறிவிப்போம்.

எமது மக்கள் கடந்த காலங்களில் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்தார்கள். அவர்களை மீண்டும் அந்த நிலைக்கு தள்ளிவிடுவதாக எமது செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது.

இன்று பலர் எமது மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள் ஆனால் நாம் அப்படியல்ல.

நாம் அமைதியான முறையில் எமது மக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றோம். அதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆகையால் எமது மக்களுக்கு பாதிப்பு வராத வகையிலான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts