123 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தீர்மானம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான உதவிகளை தான் முதலில் அறிவித்ததாக தெரிவித்த ஸ்டாலின், பல தமிழ் அரசியல் தலைவர்களும், சிவில் அமைப்புகளும், ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து குடிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிவினை மூலம் இலங்கை மக்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.

இதன் மூலம் இந்திய ரூபாய் 80 கோடிக்கு 40,000 டன் அரிசியும், இந்திய ரூபாய் 28 கோடிக்கு 137 உயிர் காக்கும் மருந்துகளும், 15 கோடி ரூபாய்க்கு 500 கிலோ பால் மாவும் இலங்கை மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

“இருப்பினும், தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. தமிழகம் முதலில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே விநியோகிக்க வேண்டும்,” என்றார்.

ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனவே, தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.என்றார்

Related Posts