வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்தி வந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தினூடாக பிற மாவட்டமொன்றுக்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக இரகசிய தகவலொன்று கிடைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த கடத்தல் முயற்சியை முறியடிக்கும் வகையில் விஷேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தோம்.
இதன்படி நேற்றிரவு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகொன்றில் குறித்த கேரள கஞ்சாவானது கடத்தி வரப்பட்டிருந்தது.
இவ்வாறு கடத்தி வரப்பட்டிருந்த கேரள கஞ்சாவானது காட்டுபுலம் இந்து மயானத்திற்கு அண்மையாக வெளி மாவட்டம் ஒன்றிக்கு கடத்தி செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே எமது விஷேட பொலிஸ் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த கேரள கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறையானது 120 கிலோவாகவும், அதன் மொத்த பெறுமதி 1 கோடியே 20 இலட்சம் ரூபா எனவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட மூவரும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களையும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.