12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!

பூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும் எனவும் எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

குறித்த நபர், கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பெற்றோரின் பாதூகப்பிலிருந்து குறித்த சிறுமியை மதுபோதையில் கடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts