12 இலங்கையர்கள் ஆஸி.யில் இருந்து நாடு கடத்தப்பட்டமை உறுதி

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், 12 இலங்கையர்கள், கொழும்புக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

தற்போது இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கையர்கள் சிலர் கொகோஸ் தீவுகளை அடைந்தமையை அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் நேற்று உறுதி செய்தார்.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 12 இலங்கையர்களை வெற்றிகரமாக கடந்த 6ம் திகதி கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இதனை உறுதி செய்துள்ள இலங்கையின் குடிவரவு மற்றும் குடிகல்வுத் திணைக்களம், குறித்த இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts