12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்!

12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று (05) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இன்று ஆரம்பமாகும் இப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். 1984 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இப்போட்டி அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்தியாவிலிருந்து 519 பேரும், இலங்கையிலிருந்து 484 பேரும், பாகிஸ்தானிலிருந்து 337 பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 254 பேரும், பங்களாதேஷிலிருந்து 409 பேரும், பூட்டானிலிருந்து 87 பேரும், நேபாளத்திலிருந்து 398 பேரும், மாலைதீவிலிருந்து 184 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

12 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 23 விளையாட்டுகளில் 228 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2,672 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் முதல்முறையாக சம அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Related Posts