1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் மனித நேயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

New Zealand players

நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நியூசிலாந்து பயிற்சியாளர் அறிவுரையின்படி பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் பவுன்சரே வீசாமல் ஹியூக்ஸ்சுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர்.

மேலும், நியூசிலாந்தின் 2வது இன்னிங்சிலும் வீரர்கள் சதம் அடிக்கும்போது பேட்டை தூக்கி கொண்டாட்டத்தை காண்பிக்க கூடாது என்றும் முடிவு செய்தனர்.

அதேபோலவே, நியூசிலாந்தின் வில்லியம்சன் 50, 100, 150 ரன்கள் அடிக்கும்போது பேட்டை உயர்த்தவில்லை. மெக்கல்லம், 100, 200 அடிக்கும்போதும் பேட்டை உயர்த்தவில்லை. மேலும் தனது இரட்டை சதத்தை ஹியூக்சுக்கு சமர்ப்பிப்பதாக பின்னர் அறிவித்தார்.

வீரர்கள் அனைவரின் ஆடையிலும் பி.ஹெச். என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற சூழ்நிலையிலும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பவுன்சர் வீசவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து, 1135 பந்துகளை நியூசிலாந்து பவுலர்கள் வீசினர். அதில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது. 2 இன்னிங்சுகளிலும் 20 விக்கெட்டுகளை சாய்த்த போதும் ஒரு விக்கெட் வீழ்ச்சிக்கு கூட கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை நியூசிலாந்து வீரர்கள்.

வெறும் கடமைக்காக விளையாடியதை போல ஆடினாலும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 690 ரன்களை குவித்தது. பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றது. ரசிகர்களின் இதயத்தையும் சேர்த்து.

Related Posts